28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எது துரோகம்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றாலும் கூட, ஒரு பொய்யை தொடர்ந்து சொன்னால் ஒரு கட்டத்தில் அது உண்மையாக்கிவிடலாம் என்னும் கிட்லரின் காரியதரிசியான கோயபல்ஸ் பாணியில் செயல்பட்டு வருகின்றனர்.

15 வருடங்களாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட தரப்புக்களே, தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியிருப்பதாகவும், தமிழ் பொது வேட்பாளரின் முடிவு ஜம்பதாயிரம் மாவீரர்களுக்கும் உயிரிழந்த பொதுமக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒற்றையாட்சிக்குள் தேர்தலில் போட்டியிடுவது துரோகம் என்றால், அந்தத் துரோகத்தை செய்து கொண்டே, மற்றவர்களை நோக்கி துரோகக் கற்களை வீச முடியுமா? இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுமே, ஒற்றையாட்சிக்குள்தான் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுதான் முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாவது திருத்தச்சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் என்னும் அந்தஸ்தை பயன்படுத்தி, தங்களின் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிப்பதற்காக செயல்பட்டுவருகின்றது.

ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ் தேசிய அரசியல் பேசுவதும் ஒரு வகை துரோகம் என்றும் கூறமுடியுமல்லவா? தமிழ் பொது வேட்பாளர் என்பது இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்களின் பிரச்சினை இப்போதும் எரியும் பிரச்சனையாகவே இருக்கின்றது – யுத்தத்தின் முடிவுடன் அனைத்தும் முந்திவிடவில்லை – முடித்துவிடவும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதுடன் கட்சி அரசியலால் சிதறடிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டத்தை மீண்டும் ஓர் அரசியல் நகர்வின் ஊடாக ஒரணியாக்குவதற்கான முயற்சியாகும். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான குரலை ஓங்கியொலிப்பதும் சிதறடிக்கப்படும் தமிழ் மக்களை ஓர் அரசியல் சமூகமாக ஓன்றுபடுத்தவும் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முடிந்தவரையில் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதற்கான ஒரு புதிய அரசியல் நகர்வாகும்.

இது எவ்வாறு துரோகமாக முடியும்? அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்னும் பெயருக்கான முக மூடியாகவே’தமிழ் தேசிய மக்கள் முன்னணி’ பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறாயின் அதுவும் கூட தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் ஒரு துரோகம்தான் – அதாவது, இலங்கைத் தேசியத்தை முதன்மைப்படுத்துவதற்கான யாப்பு ஏற்பாட்டைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூலம் எவ்வாறு தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வது உண்மையாயின் முதலில் கட்சியின் யாப்பை சட்டரீதியாக மாற்றியிருக்க வேண்டுமல்லவா – ஆனால் அதனை இன்றுவரையில் செய்யவில்லை.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுபவர்கள் அந்த வாக்குகளுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும் என்பதையே நாம் இந்த இடத்தில் வலியுறுத்த முடியும். முன்னணியின் பெயரால் இயங்குபவர்களுக்கு ஆதரவளிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். உண்மையில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் சுமந்திரன்களும் கஜேந்திரன்களும் ஒரு நேர்கோட்டிலேயே செயல்ப்பட்டுவருவதாக தெரிகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles