உள்ளூராட்சி மன்றங்களை அதிகமாகக் கைப்பற்ற வேண்டும் – மக்கள் தங்களுடன் தான் இருக்கின்றனர் என்பதைக் காண்பிக்க வேண்டும் என்னும் அவாவில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் என்போர் ஏட்டிக்குப் போட்டியாக பேசிவருகின்றனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தாயகம் என்னும் பழைய கதையைக் கூறுகிறார்.
மறுபுறம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ அவருக்கே உரித்தான பாணியில், தமிழ் அரசு கட்சி – அதேபோல், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குபவர்கள் என்னும் கதையை கூறுவதன் மூலம் தனது ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருபுறம், தங்களுடைய கடந்தகால ஏக்கிய ராஜ்ய கதைக்கு சுமந்திரன் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசியல் வெள்ளமோ கழுத்தையும் தாண்டிவிட்டது.
இப்படியே தொடர்ந்தால் சில வருடங்களில் மூச்சுவிடுவதே முடியாமல் போகலாம். இன்றைய அரசியல் சூழல் எவ்வாறான நிலைமையில் இருக்கிறது? இதில் தமிழ் மக்களின் வாழ்நிலை என்ன நிலையில் இருக்கிறது? இதனை சரிசெய்யக்கூடிய ஆற்றலோடு நாம் இருக்கிறோமா? இவைகளைப் புரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் பழைய கதைகளைக் கூறித் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.
இதுவரை தமிழர் பிரச்னையில் ஆர்வம் காட்டிவந்த இந்தியாவின் அணுகுமுறைகள் அப்படியே தொடருமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. இது மிகவும் சிக்கலானது. ஏனெனில், இந்தியாவின் ஈடுபாடு இந்த விடயத்தில் இல்லை என்றால் தென்னிலங்கை முற்றிலுமாக தமிழர் பிரச்னையை கைகழுவி விடுவது இலகுவாகிவிடும். இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் முதலில் தங்களை நிறுத்துப் பார்த்து அதற்கேற்ப கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால், நடைமுறைக்கு உதவாத வாதங்களை முன்வைப்பதும் பழைய கதைகளைக்கூறி, மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களை விதைக்க முற்படுவதும் மேலும், தமிழ் மக்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தவே வழிவகுக்கும். சாத்தியப்பட முடியாத விடயங்களை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் தொடர்ந்தும் உச்சரித்துக் கொண்டிருப்பதும் – சாத்தியமான விடயங்களை முன்வைத்து அரசியலை முன்னெடுக்க முயற்சிக்காமையும்தான் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம் பேசுவோரிலிருந்து விலகிச் செல்வதற்கான காரணம்.
ஆனால், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் இப்போதும்கூட, தங்களுடைய நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பதுதான் கொடுமையானது. தமிழர் அரசியலில் ஏற்கனவே தூய்மை வாதம் அவமானகரமான தோல்வியை சந்தித்துவிட்டது. அரசியலில் தூய்மை வாதங்களை முன்வைத்துக் கொண்டிருப்போர் இறுதியில் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் மக்களுக்கு எதிராகவே சிந்திக்கின்றனர் – செயல்படுகின்றனர். எனவே, இனியும் வெறும் வார்தைஜால அரசியலை முன்வைப்பதை விடுத்து, சாத்தியங்கள் தொடர்பில் சிந்தியுங்கள்.