29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

என்ன செய்யப் போகின்றோம்?

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவரை நோக்கித் தமிழ் மக்களின் வாக்குகளை திரட்டுவது எவ்வாறு என்பதுதான் அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை எவ்வாறு கண்டடைவது என்பதுதான் அடிப்படையான கேள்வியாகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போதும் வழமையான தளம்பல் போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத்தான் நாங்கள் ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதுதான் ஒரேயொரு தமிழ்த் தேசிய நிலைப்பாடாகும்.

ஆனால், இந்த நிலைப்பாட்டைத் தோற்கடிக்க வேண்டுமென்று தென்னிலங்கை வேட்பாளர்கள் சிந்திப்பதோ தலையீடுகளை செய்வதோ – ஆச்சரியமான விடயமல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்குள் இருப்பவர்களே அதனை எதிர்ப்பது தான் மிகவும் சிக்கலான பிரச்னையாகும். குறிப்பாக, தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்தும் தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்க முயற்சித்து வருவது வெள்ளிடைமலை. ஒப்பீட்டடிப்படையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களால் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரையில் எடுக்க முடியவில்லை – ஒருவேளை தமிழ் அரசு கட்சிக்குள் செல்வாக்குச் செலுத்தும் ஒரு தரப்பினர் இறுதி நேரத்தில், தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் முடிவை எடுத்தால் பொது வேட்பாளரை ஆதரிப்போர் எவ்வாறான முடிவை எடுப்பர்? கட்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுப்பார்களா? ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தி, அவரை நோக்கி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பிரச்னை உண்டு? ஏன் அதனை எதிர்க்க வேண்டும்.

கடந்த பல தசாப்தங்களாக தென்னிலங்கை வேட்பாளர் ஒவருக்குத்தானே தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றனர். இந்த ஒருமுறை தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதில் அப்படி என்ன நிகழ்ந்துவிடப் போகின்றது? இது தொடர்பில் அனைத்துத் தமிழ்த் தேசிய தரப்புகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒருவேளை, கட்சிகளின் தலைமைகள் தடுமாறினாலும் தடம்புரண்டாலும் கட்சிகளின் தொண்டர்கள் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அது அவர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நாங்கள் தோற்கடித்துவிடுவோம் என்று சபதம் எடுப்பதில் என்ன பெருமை உண்டு? இதனால், எதனை சாதிக்க முடியும். மீண்டுமொரு முறை ஏமாற்றப்பட்டோம் – அல்லது, ஏமாறினோம் என்னும் பதிலைத் தவிர, வேறு என்ன நிகழந்துவிடப் போகின்றது?

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles