மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட, அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை, கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்த வேளை, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பன தொடர்பாக, நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, 2015 முதல் 2019 ற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட, தேர்தல் வரைபை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இச்செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் எனவும், எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது, மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்கள் குறித்ததான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன், உடனடியாக அவ் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு, கோரிக்கை விடுத்தார். தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்பாடுவதாகவும், வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும், எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.