சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணையும் என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வழங்கியுள்ள விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கருத்தானது முற்றிலும் பொய்யான கருத்தாகும். பொறுப்புடன் கூறவேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணையுமென்று கூறப்படுமாயின் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அந்தத் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மட்டும் அரசாங்கத்துடன் இணைவது என்பது சர்வகட்சி அரசாங்கமாக அமையாது.
இவ்விடத்தில் பொறுப்புடன் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எடுக்கும் எந்த தீர்மானத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவோம்.
கலந்துரையாடல்களில் ஈடுபட்டே நாம் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கின்றோம்.
எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாஸ எடுக்கும் முடிவுகளே இறுதி முடிவாக இருக்கும்.
நாம் நினைக்கும் வகையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு இருக்க முடியாது.
எனவே இவ்வாறான தவறான அறிவிப்புகள் விடுக்கப்படுவதற்கும் நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.