குருணாகல் – வெஹெர பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிவாயு சேமிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்று கிடைக்கப்பெறவுள்ளது. பகுப்பாய்வு நடவடிக்கைகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தீ விபத்து ஏற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிவாயு சேமிப்பகத்தில் எரிவாயு களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் கொள்கலன்களுக்கு நிரப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.குருணாகல் – கொழும்பு பிரதான வீதியில் வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குருணாகலில் உள்ள தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த பாரவூர்தியொன்று 47 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட எரிவாயு கொள்கலன்களுக்கு எரிவாயு நிரப்புவதற்காக வந்திருந்த போதுஇ இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் எரிபொருள் நிலைய முகாமையாளர், எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர், எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே உயிரிழந்தனர்.