எரிபொருள் விலையை விரைவாக அதிகரிக்குமாறு, பெற்றோலிய கூட்டுத்தாபனம், வலுசக்தி அமைச்சிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்க, எவ்வித தீர்மானமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என, வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.
உலக சந்தையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, தேசிய மட்டத்தில், எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என, வலுசக்தி அமைச்சிடம், கடந்த 7 ஆம் திகதி வலியுறுத்தினோம்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில், வலுசக்தி அமைச்சு, இதுவரையில், சாதகமான தீர்மானத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.
உலக சந்தையின் விலையேற்றத்திற்மைய, எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால், ஒரு லீற்றர் டீசல் விற்பனையின் போது, 50 ரூபா நட்டத்தையும், ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் போது 17 ரூபா நட்டத்தையும் எதிர்க்கொள்கிறோம்.
எரிபொருள் விலை அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பெற்றோலிய கூட்டுத்தாபனம், மேலும் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும்.
பொது காரணிகளை கருத்திற்கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, வலுசக்தி அமைச்சிடம், இரண்டாவது முறையும் வலியுறுத்தியுள்ளோம்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தேசிய மட்டத்தில், எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அத்துடன், பொருத்தமான எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
அதனால், எமது கோரிக்கை தொடர்பில், வலுசக்தி அமைச்சு சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.