யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக, சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலைப் பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகங்களைக்
கண்டித்துப் போராட்டமொன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ‘எங்களுடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெடுக்குநாறிமலைப் பகுதியில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் மூச்சுத் திணறலைச் சந்திக்க நேரிட்டது.
வேறு வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களும் இவர்களுடன் அடைக்கப்பட்டார். எமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, இவர்களுக்கு நெருக்கடி கொடுத்து இவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு அறைக்குள் கொண்டுவரப்பட்டார்களா?’.
இந் நாட்டிலே எங்களுக்கு உள்ள பூர்வீக மரபுரிமைகளின் அடிப்படையில், கோவிலில் வழிபாடு செய்தவர்களை கைது செய்து மிருகங்களைப் போன்று பெரும்பான்மையினக் காடையர்கள் நடாத்திக்கொண்டு இருக்கின்றனர்.
இதைப் பார்த்து எமது சமூகம் அமைதியாக இருக்குமாக இருந்தால், உங்களுடைய அனைத்து உடமைகளையும் இழந்து நீங்கள் அடிமைகளாக இந்த நாட்டிலே வலம் வரவேண்டி வரும். 300-400 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளையர்கள் தென்னாபிரிக்கர்களை அடிமைகளாகப் பயன்படுத்தியதைப் போன்று, ஈழத் தமிழர்களாகிய எங்களுடைய மக்கள், எங்களுடைய பெண்கள் பேரினவாதிகளுக்கு அடிமைகளாக மாற நேரிடலாம். இதனை எல்லோரும் மனதில் வைத்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன.
அங்கே இப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கொழும்பு றோயல் கல்லூரியில் இருந்து கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இங்கே எங்களுடைய மக்கள் மானங்கெட்டு விமானப் படையினரின் கண்காட்சியில் போய் நிற்கின்றனர். உங்களுடைய பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினால், அப்படிப்பட்டவர்களை இவ்வாறு போய் நின்று கௌரவிப்பீர்களா?. உங்களுக்கு எங்கே உங்களது அறிவுபோனது. நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்துத்தானே இந்தப் போராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது.
இவ்வளவு தியாகங்கள் நடந்த பின்னர் அடிப்படைச் சிந்தனையில்லாமல், நாங்கள் அந்த இடத்திற்குச் செல்கின்றோம்.
தென்னிந்தியாவில் இருந்து இங்கே கூத்தாட வருகிறார்கள். இந்த அழிவுகளைப் பார்ப்பதற்கு யாருமில்லை. ஏழைகள் அப்பாவிகள், அந்த வெடுக்குநாறிமலைக் காட்டிலே நின்று, தங்களுடைய இருப்புக்காகப் போராடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை ஒட்டுமொத்தமான தமிழனும், நடக்கின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை என்று சொன்னால், எங்களுடைய இனம் 10 ஆண்டுகள் வாழ்வதென்பது அதிகமாகவே இருக்கும்’என்றார்