ஏன் இந்த அச்சம்?

0
108

இலங்கையில் படைத்தளத்தை நிறுவும் எந்தவோர் எண்ணமும் அமெரிக்காவுக்கு இல்லையென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்திருக்கின்றார்.
இன்னும் எத்தனை முறைதான் அமெரிக்கத் தூதுரகம் இதனை கூற வேண்டியிருக்கும்? அண்மையில், அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் வில்லியம் வேன்ஸ் கொழும்புக்குள் பிரவேசித்தார் எனவும் இராணுவ தலைமையகத்தின் அதிகாரிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர் என்றும் ஒரு செய்தியை விமல் வீவரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதனை மறுத்திருந்தார்.
அமெரிக்கா திருகோணமலையில் ஒரு படைத்தளத்தை நிறுவப்போவதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் அவ்வப்போது கூறுவதுண்டு.
குறிப்பாக தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்துபவர்களும் தீவிர தேசியவாதிகளாக அடையாளம் காண்பிப்பவர்களுமே இவ்வாறான கதையை திரும்பத் திரும்ப கூறிவருகின்றனர்.
உதாரணமாக திஸ்ஸ விதாரண போன்றவர்கள்.
ஒருவேளை அவர்கள் இப்போதும் முன்னைய பனிப்போர் கால சிந்தனையிலிருந்து வெளியில் வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கலாம்!
பனிப்போர் காலத்தில் திருகோணமலைமீது அமெரிக்கா கண் வைத்திருப்பதான ஒரு நம்பிக்கை நிலவியது.
குறிப்பாக அன்றைய சூழலில், சோவியத் முகாமுடன் ஒன்றிணைந்திருந்த இந்தியாவிடம் அவ்வாறான கவலைகள் இருந்தன.
அன்றைய ஆட்சியாளரான ஜே.ஆர். ஜெயவர்த்தன திருகோணமலையை அமெரிக்க கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்க முயற்சிப்பதான ஒரு சந்தேகம் இருந்தது.
ஜே. ஆரின் செயல்பாடுகளும் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன.
அப்போது, இந்தியாவின் உளவுத் துறையின் தலைவராக இருந்த ஆர்.என். காவோ இதனை நேரடியாகத் தெரிவித்தார் என்றும்கூட சிலர் எழுதியிருக்கின்றனர்.
இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும்கூட, ஜே.ஆரின் மேற்கு சார்பான கொள்கையை இந்திரா காந்தி சகித்துக் கொள்ளவில்லை.
இந்தியா அன்றைய சூழலில், இலங்கை விடயத்தில் நேரடியாகத் தலையீடு செய்ய முற்பட்டமைக்கு பின்னாலிருந்த காரணம் இதுதான்.
ஜே.ஆர். இந்தியாவின் கரிசனைகளை புறம்தள்ளி செயல்படாதிருந்திருந்தால் இந்தியாவின் இராணுவ தலையீடும் நிகழாமல் போயிருக்கலாம்.
ஆனால், இன்றுள்ள நிலைமை முற்றிலும் வேறானது.
பனிப்போர் கால அமெரிக்காவும் இல்லை – அன்றிருந்த இந்தியாவும் இப்போதில்லை.
இப்போது, இந்தியாவும் அமெரிக்காவும் குவாட் நாடுகள் – மூலோபாய பங்காளிகள்.
சில விடயங்களில் மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும்கூட அடிப்படையான மூலோபாய விடயங்களில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே முகாமில்தான் இருக்கின்றன.
இவ்வாறாதொரு பின்புலத்தில் திருகோணமலையில் ஒரு படைத்தளத்தை நிறுவவேண்டிய எந்தவொரு மூலோபாய தேவையும் அமெரிக்காவுக்கு இல்லை.
ஒருவேளை அவ்வாறானதொரு தேவையை தவிர்க்க முடியாதென்றால் நிச்சயம் அமெரிக்காவும் இந்தியாவும் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையில்தான் சில நகர்வுகளை மேற்கொள்வர்.
இந்தியாவை புறம்தள்ளி – இந்தியாவுக்குத் தெரியாமல் அவ்வாறானதொரு தளத்தை அமெரிக்காவால் நிறுவ முடியாது.
சிங்கள அரசியல்வாதிகள் தங்களின் உள்ளூர் அரசியலுக்காக இவ்வாறான பரபரப்புகளை ஏற்படுத்துகின்றார்கள் என்றால், தமிழ் புத்திஜீவிகள் என்போரும்
விடயங்களை ஆழமாக நோக்காமல் சிங்கள அரசியல்வாதிகளின் கதைகளை பாடமாக்கி சிந்திக்க முற்படுகின்றனர்.
சிங்களவர்கள் ஒருவேளை அமெரிக்க படைத்தளம் வந்துவிட்டால் தங்களின் ஆதிபத்தியம் இல்லாமல் போய்விடுமென்று அஞ்சக்கூடும்.
தமிழர்கள் இந்த விடயத்தைப் பார்த்து ஏன் அச்சப்பட வேண்டும்? ஒருவேளை – அமெரிக்கா உண்மையிலேயே படைத் தளமொன்றை நிறுவ முயற்சிக்கின்றதென்றால் அதனை எவரால் தடுக்க முடியும்? இவ்வாறான விடயங்கள் மிகவும் உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும்.
எனவே, இவ்வாறான விடயங்களில் தமிழர்கள் தங்களின் நேரத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை.
இலங்கைத் தீவில் நடைபெறக்கூடிய எதனையும் எவராலும் தடுக்க முடியாது.
அந்தக் கட்டத்தை இலங்கை தாண்டிவிட்டது.
எனவே, பல்வேறு வடிவங்களில் வெளித் தலையீடுகள் இடம்பெறத்தான் போகின்றன.
அதனை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாமென்றுதான் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.