ஏறாவூரில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 500 க்கும் மேற்பட்டோர் கைது

0
377

மட்டக்களப்பு-ஏறாவூர் பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வாகனங்களில் பயணம்செய்த ஐந்நூற்றுக்கும் மேற்;பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டநிலையில் அத்தியாவசிய தேவையின்றி இவர்கள் வாகனங்களில் பயணம் செய்ததாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் விதிமுறைகளுக்கு மாறாக திறக்கப்பட்டிருந்த 30 வர்த்தக நிலையங்கள் ஏறாவூர்ப் பொலிஸாரின் உத்தரவை அடுத்து மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேனவின் பணிப்புரைக்கமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்வின் வழிகாட்டலில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜயசுந்தரவின் தலைமையில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொலிஸ் குழுவினர் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து ஏறாவூர் நகரம் சுறுசுறுப்பாக இயங்கியதை அவதானிக்க முடிந்தது.
பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப்பின்பற்றி சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.