இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் நியூயோர்க் நசவ் கவுன்டி சரவ்தேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்ற நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் இந்தியா மூன்றாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
தென் ஆபிரிக்கா (டி குழு), அவுஸ்திரேலியா (பி குழு) ஆகியன சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவான முதல் இரண்டு அணிகளாகும்.
விசித்திரமான ஆடுகளத்தில் இந்தப் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் பந்து எகிறிப் பாய்வதுடன் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பந்து தாழ்வாக சென்றது.
ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆனால், இந்த வெற்றி இந்தியாவுக்கு இலகுவாக அமையவில்லை.
விராத் கோஹ்லி (0), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (3), ரிஷாப் பான்ட் (18) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க ஓவர்கள் நிறைவில் இந்தியா 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து 10 ஓவர்கள் நிறைவில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் வெற்றி இலக்கை அடைய கடைசி 10 ஓவர்களில் இந்தியா 64 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.
சூரியகுமார் யாதவ், ஷவம் டுபே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 15 ஓவர்கள் நிறைவில் மொத்த எண்ணிக்கையை 76 ஓட்டங்களாக உயர்த்தினர். அதாவது 5 ஓவர்களில் அவர்களால் 29 ஓட்டங்களையே பெற முடிந்தது.
அதன் பின்னரும் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட அவர்கள் இருவரும் 17ஆவது ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்து 19ஆவது ஓவரில் வெற்றியை உறுதிசெய்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சூரியகுமார் யாதவ் 50 ஓட்டங்களுடனும் ஷிவம் டுபே 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் சௌராப் நேத்ரவோல்கர் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த ஆடுகளத்தில் ஐக்கிய அமெரிக்கா 110 ஓடடங்களைப் பெற்றது சிறந்த விடயமாகும்.
துடுப்பாட்டத்தில் நிட்டிஷ் குமார் (27), ஸ்டீவன் டெய்லர் (24) கோரி அண்டர்சன் (15), ஷெட்லி வென் ஷோல்வைக் (11 ஆ.இ.), அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் (11), ஹார்மீத் சிங் (10) ஆகிய அறுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அர்ஷ்தீப் சிங்