சென். லுசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற குழு 1க்கான கடைசிக்கு முந்தைய சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 24 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா 3ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஐந்தாவது தடவையாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியா, இரண்டாவது அரை இறுதியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 27ஆம் திகதி எதிர்த்தாடும்.
ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு ஆகியன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இந்திய அணித் தலைவர் அதிரடி துடுப்பாட்டம் மூலம் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடிக்க செய்தார். ஐந்தாவது ஓவர் நிறைவில் 19 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்தார்.
தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா 2ஆவது விக்கெட்டில் ரிஷாப் பான்ட்டுடன் 38 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ரிஷாப் பான்டின் பங்களிப்பு வெறும் 15 ஓட்டங்களாகும். போட்டியின் 12ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 127 ஓட்டங்களாக இருந்தபோது ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்தார்.41 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா 7 பவண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களைக் குவித்தார்.