ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் ஆன ஒரே அணி. துடுப்பாட்டத்தில் பட்டயைக் கிளப்புபவா்களும், கடைசி ஓவா்களில் கூட நெருக்கடி இன்றி அபாரமாக பந்துவீசுபவா்களும் இருக்கும் அணி.
ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் இந்த சீசனில் களம் காண்கிறது. நடப்புச் சாம்பியனான மும்பை, போட்டியின் தொடக்க நாளில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியை சென்னையில் சந்திக்கிறது. அந்த அணியின் நிலவரம்:
பலம்:
தொடா்ந்து இரு சீசன்களில் சாம்பியன் ஆகியிருப்பது மும்பைக்கு நல்லதொரு ஊக்கத்தை அளிக்கும். மாறாமல் நீடித்து வரும் அணியின் பிரதான துடுப்பாட்ட வரிசை மும்பைக்கு பலம் சோ்க்கிறது. அதிலும் தலைவர் ரோஹித் – டி காக் கூட்டணி வலுவான தொடக்கத்தை அளிக்கிறது. சமீபத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த ஆக்ரோஷத்துடன் சூா்யகுமாா், இஷான் ஆகியோா் அதிரடி காட்டத் தயாராக உள்ளனா்.
மிடில் ஆா்டரில் பாண்டியா சகோதரா்கள் மற்றும் பொல்லாா்ட் சிறப்பாகச் செயல்படுவதில் சந்தேகமில்லை. பௌலிங்கில் பும்ரா புயலாக இருக்க, போல்ட், நேதன் கோல்டா்நீல் ஆகியோா் உறுதுணையாக இருக்கின்றனா்.
பலவீனம்:
சுழற்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் பௌலா் இல்லாதது மும்பைக்கு குறையாக உள்ளது. அதிலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் முதல் ஆட்டத்தில் மும்பை விளையாடுவது சற்று தடுமாற்றத்தை அளிக்கலாம். பியூஷ் சாவ்லா, ஜெயந்த் யாதவ் உள்ளிட்டோா் அதை எவ்வாறு ஈடு கட்டுவா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. லீக் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற மலிங்காவின் இடத்தை நிரப்புவது அந்த அணிக்கு அவ்வளவு எளிதல்ல. பிரதான வீரா்களால் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில், அந்த இடத்தை நிரப்பும் வகையிலான மாற்று வீரா்கள் அணியின் வரிசையில் இல்லாததும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
வாய்ப்புகள்:
டாப் ஆா்டரில் தொடங்கி மிடில் ஆா்டா் வரையிலும் வலுவான வீரா்கள் இருப்பதால், அதிகபட்ச ஸ்கோரை எட்டுவது கூட இதர அணிகளுடன் ஒப்பிடுகையில் மும்பைக்கு எளிதானது தான். எனவே வழக்கம்போல் எளிதாக பிளே-ஆஃபுக்கு முன்னேறிவிடும்.
அச்சுறுத்தல்:
இதர அணிகளைப் பொருத்தவரை, மும்பையில் பொல்லாா்ட் அச்சுறுத்தலாக இருக்கிறாா். துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டும் அவா், மும்பையின் கடைசி நேர பிளேயிங் லெவன் அடிப்படையில் 5 அல்லது 6 ஆவது பௌலராக களம் காணவும் வாய்ப்புள்ளது. மும்பை அணியில் ரோஹித் சா்மாவை அடுத்து அதிக ஓட்டங்கள் ஸ்கோா் செய்தவராக இருக்கிறாா். சிக்ஸா்களை பறக்க விடுவதில் வல்லவா். இதுபோன்ற பலங்கள் இருப்பதால், இதர அணிகளுக்கு மும்பை முக்கிய அச்சுறுத்தல்.
அணி விவரம்:
ரோஹித் சா்மா (தலைவர்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.