சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) கிரிக்கெட் போட்டித் தொடர்பளில் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தாமதமாக வீசப்படும் ஓவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பந்துவீச்சு அணிக்கு ஓவர்களுக்கு இடையில் 60 வினாடிகள் வழங்கப்படும் என்றும் ஒரு இன்னிங்ஸில் மூன்று முறை தாமதம் ஏற்பட்டால், துடுப்பாட்ட அணிக்கு மொத்தம் ஐந்து ஓட்டங்கள் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.சி.சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானம், வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை சோதனை அடிப்படையில் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும் என்றும் முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறை இவ்வாறு நடக்கும் போது ஐந்து ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படுமெனவும் இந்த ஓட்டங்கள் துடுப்பாட்ட அணிக்கு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.