ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தூதரக உயரதிகாரி வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளராகப் பொறுப்பை வகித்து வந்த, சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் பச்லெட் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு வோல்கர் டர்க்கின் பெயரை ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் பரிந்துரைத்தார். இந்த நியமனத்துக்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக அவர் பொறுப்பேற்கிறார். மனித உரிமைகள் பேரவை ஆணையாளராக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த கௌரவம். எனக்குரிய பொறுப்பை பெரும் பொறுப்புணர்வுடன் ஏற்று திறம்படச் செயற்படுவேன் என வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளை உலகின் அனைத்து இடங்களிலும் பேண முடிந்த அனைத்தையும் செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார். வோல்கர் டர்க் முன்பு மலேசியா, கொசோவோ மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் ஐ.நா அகதிகள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.