ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம், இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டனின் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஐக்கிய நாடுகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அதனை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மொன்டெனிக்ரோ, வட மெசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய பிரேரணை கடந்த வியாழக்கிழமை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இப்புதிய தீர்மானம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் தாரிக் அஹமட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் முடிவை நாம் வரவேற்கின்றோம். இந்தத் தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிக்கும். அதேவேளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கொண்டிருக்கும் ஆணை மற்றும் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்குக் கொண்டிருக்கும் ஆணை என்பன இத்தீர்மானத்தின் ஊடாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது உண்மையை வெளிப்படுத்துவதற்கும், நிலைபேறான நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கும், மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எமது கூட்டிணைந்ததும் புதுப்பிக்கப்பட்டதுமான இயலுமை தொடர்பில் நாம் இப்போது கவனம் செலுத்தவேண்டும். எனவே இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் வலியுறுத்தும் அதேவேளை, இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் அழைப்புவிடுக்கின்றோம்’ என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.