17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த 19ஆம் திகதி துபாயில் இடம்பெற்றது.
இந்த ஏலத்துக்கு முன்பு ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.
இதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னாள் தலைவரான ஹர்திக் பாண்டியாவை அந்த அணி விடுவித்தது.
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியதுடன், அவரை அணியின் தலைவராகவும் நியமித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டமை ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.
குறிப்பாக அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பின் தொடர்வதில் இருந்து சிலர் விலகினர்.
இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் பக்கத்தின் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 13.2 மில்லியனிலிருந்து 12.9 மில்லியனாக குறைந்தது.
இந்தநிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு கணுங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, ரோஹித் நீக்கப்பட்டு பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மீண்டும் மும்பை அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவாரா? அல்லது புதிதாக ஒருவர் மும்பை அணியின் தலைவராக நியமிக்கப்படுவாரா என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.