ஐ.பி.எல்.: 2021 ; இறுதி பந்து வரை பரபரப்பு! பெங்களூருக்கு முதல் வெற்றி!!

0
215

இறுதிப் பந்துவரை பரபரப்பாக நீடித்த முதல் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்களால் வெற்றி கொண்டது பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ்.

ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் பிறிமியர் லீக் இருபது – 20 போட்டிகள் நேற்று ஆரம்பமானது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் நடப்பு சம்பயின் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி முதலில் களத் தடுப்பைத் தெரிவு செய்தார்.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அணித் தலைவர் ரோஹித் சர்மாவும், கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாகக் களம் புகுந்தனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த இருவரும் பந்துகளை மெதுவாகவே ஓட்டங்களை சேர்த்தனர். நான்காவது ஓவரை வீசினார் சாகல். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர் கொண்டார் லின். கூக்லியாக வீசப்பட்ட அந்தப் பந்தை மெதுவாக தட்டினார் லின்.

இதன்போது ரோஹித் ஓட்டம் எடுக்க விரும்பி ஓடினார். ஆனால், லின் ஓட்டம் எடுக்க விரும்பாமல் நிற்கவே, ரோஹித் திரும்பச் செல்ல முயன்றார். ஆனால், பந்தை எடுத்த கோலி சாகலிடம் அதை எறியவே அவர் ஸ்ரொம்ப் செய்யவே ரோஹித் சர்மா ஆட்டமிழந்து சென்றார். அப்போது அவர் ஒரு பௌண்ட்ரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 19 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அடுத்து வந்தார் சூரியகுமார் யாதவ். மும்பையின் அதிரடி ஆட்டக்காரராக கடந்த போட்டியில் ஜொலித்த அவர், இம்முறை சறுக்கினார். 23 பந்துகளை சந்தித்த அவர் 4 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் 4 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் என விளாசிய லின் 35 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்த நிலையில் – ஓர் ஓட்டத்தால் அரைச்சதத்தை தவற விட்டு வாஷிங்டன் சுந்தரின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த இஷான் கிஷன் 2 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ஓட்டங்களை எடுத்து எல். பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் எவரும் ஜொலிக்கவில்லை. ஹார்திக் பாண்ட்யா 13, கிரன் பொலார்ட் 7, குர்ணல் பாண்ட்யா 7, மக்ரோ ஜன்ஸன் 0, ராகுல் சாகர் 0 என்று ஆட்டமிழக்கவே 20 ஓவர்கள் 9 விக்கெட்கள் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

பெங்களூரின் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இறுதி ஓவரில் மட்டும் அவர் குர்ணல் பாண்ட்யா, மக்ரோ ஜன்சன், ராகுல் சாகர் என மூவரை ஆட்டமிழக்கச் செய்தார். ஜெமைசன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு 160 ஓட்டங்கள் என்ற இலகு இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடியது பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி.

இங்கிலாந்து – இந்தியா போட்டியில் பரீட்சார்தமாக தொடக்க வீரராக களமிறங்கி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றிருந்தார் கோலி. இதேபாணியை பின்பற்றி பெங்களூர் அணிக்கும் தொடக்கம் கொடுத்தார் விராட் கோலி. அவருடன், வாஷிங்டன் சுந்தரும் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

தான் எதிர்கொண்ட முதல் பந்தில் பௌண்ட்ரி அடித்து அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார் கோலி. வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆட, கோலி அதிரடியாக ஆடினார். 16 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க, அடுத்து வந்தார் ராஜத் படிதார். அவராலும் நிலைக்க முடியவில்லை, 8 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அதிரடி வீரர் கிளென் மக்ஸ்வெல் வழக்கமான தனது பாணியில் ஆடினார். இந்நிலையில், விராட் கோலி 4 பௌண்ட்ரிகளுடன் 33 ஓட்டங்களை எடுத்து பும்ராவின் பந்தில் எல். பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மக்ஸ்வெல்லுடன் இணைந்த ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியில் மிரட்டினார்.

இந்நிலையில், 3 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களை விளாசிய மக்ஸ்வெல் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பியபோதும், ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். இறுதி ஓவரில் நான்காவது பந்தில், அதுவரை அதிரடி காட்டிய வில்லியர்ஸ் 4 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களை விளாசிய அவர் 27 பந்துகளில் 48 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதி இரு பந்துகளில் இரு ஓட்டங்களை வெற்றிக்காக பெற வேண்டிய நிலையில் 9ஆவது வீரராக இறங்கிய ஹர்ஷல் பட்டேல் அந்த ஓட்டங்களைப் பெற்றார். இதனால் இறுதிப் பந்தில் பெங்களூர் அணி 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இறுதியில் பட்டேல் 4, சிராஜ் 0 என்ற ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் பந்துவீசிய பும்ரா, ஜன்சென் தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.