கச்சதீவு அரசியல்

0
95

இந்திய பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி உச்சபட்சமான தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இதே போன்று மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணி பாரதிய ஜனதாவை தோற் கடிக்கும் இலக்குக்காகத் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஒப்பீட்டடிப்படையில் கடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விடவும் இம்முறை பாரதிய ஜனதா கட்சி சவாலை எதிர்கொண்டுள்ள தாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், இம்முறை பாரதிய ஜனதா பெருமெடுப்பில் தனிக்கட்சியாக வெற்றிபெறுமாக இருந்தால் அடுத்து வரவுள்ள இரண்டு தேர்தல்களுக்கு எதிரணியினரால் மேலுக்கு வரவே முடியாமல் போகலாம். இவ்வாறானதொரு நிலையில் இரண்டு அணிகளும் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி எதிரணிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக இந்தியா கூட்டணி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் நாடு தேர்தல் களம் முன்னர் எப்போதுமில்லாதவாறு தீவிரமடைந்திருக்கின்றது. தேர்தல் பிரசாரங்களின்போது, இம்முறை கச்சதீவு பிரதான பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலங் கையின்மீதும் மத்திய அரசாங்கத்தின்மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருகின்ற நிலையில் கச்சதீவு விவகாரம் பாரதிய ஜனதா கட்சியால் தேசியவாத நிகழ்ச்சிநிரலாக மாற்றப்பட்டிருக்கின்றது. கச்சதீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே இலங்கையிடம் பறிகொடுத்ததாக அண்மையில் இந்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வைத்து தெரிவித்திருந்தார்.
தற்போது, அதே கருத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கின்றார். காங்கிரஸ் கட்சியே இரு நாடுகளுக்கான எல்லை நிர்ணயத்தின்போது கச்சதீவை எந்தப் பக்கம் வைப்பது என்னும் தீர்மானத்தின்போது இலங்கையின் பக்கமாக வைத்தது என்று ஜெய்சங்கர் தெரிவித்திருக்கின்றார்.
கச்சதீவை மீளவும் எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை தமிழ் நாட்டு அரசாங்கங்களால் காலத்துக்குக்காலம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ஒரு காரணமுண்டு. இந்திரா காந்தி இந்த உடன்பாட்டை செய்தபோது, தமிழ்நாட்டு அரசாங்கத்தோடு – ஆகக் குறைந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியுடன்கூட கலந்துரையாடி யிருக்கவில்லை. அவர்களின் சம்மதம் இன்றியே இந்த உன்பாடு செய்யப்பட்டது.
இதன் காரணமாகவே, தமிழ்நாட்டு அரசியலில் கச்சதீவு தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய விடயமாக நோக்கப்படுகின்றது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முதலமைச்சர்களுமே கச்சதீவை மீளவும் எடுக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்தை கோரி வந்திருக்கின்றனர். ஜெயலலிதா, இது தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமும் கொண்டு வந்திருந்தார். இது தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், ‘அது இரு நாட்டு உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவால் வழங்கப்பட்ட விடயம். அதனை இனிப் பெற முடியாது – இதனையும் மீறிப் பெற வேண்டு மானால் யுத்தம்தான் செய்ய வேண்டும்’, என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ்நாட்டில் காலூன்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கும், பாரதிய ஜனதா கட்சி கச்சதீவை காங்கிரஸூக்கு எதிரான வலுவான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த முற்படுகின்றது.
ஒரு விடயம் காலம் கடந்தும் எவ்வாறு உள்ளூர் அரசியலுக்கு பயன்பட முடியுமென்பதற்கு கச்சதீவு ஒரு நல்ல
உதாரணம்.