ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதி.
இதில் எவருக்குமே சந்தேகங்கள் இருக்காது.
ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வைக் காணப்போவதாகக் கூறுகின்றார்.
அவர் எவ்வாறான உள்நோக்கங்களையும் கொண்டிருக்கலாம் – அது வேறு விடயம்.
ஆனால், அவரோ பேசுவதற்கு கட்சிகளை அழைக்கின்றார்.
கூட்டமைப்பும் பங்குகொண்டு அதன் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றது.
இதில் பங்குகொள்ளாமலும் விடலாம்.
அவ்வாறாயின், அடுத்த கட்ட வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
அவ்வாறானதொரு வேலைத்திட்டம் எவரிடமும் இல்லை.
எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல் பேச்சில் பங்குகொண்டமையானது துரோகமென்று கஜேந்திரகுமார் வாதிடுகின்றார்.
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தோடு கூட்டமைப்பை ஒப்பிட்டிருக்கின்றார்.
முதலில் இது ஒரு பேச்சே அல்ல.
இங்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைக்களுக்கான இறுதித் தீர்வு தொடர்பில் பேசப்படவுமில்லை.
பேச்சு தொடர்வதாயின் அரசாங்கம் அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்னும் வகையிலேயே பேசப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பு முன்னெடுக்கும் ஒவ்வொரு விடயங்களையும் எதிர்ப்பதன் மூலம் தங்களின் தேர்தல் அரசியலை முன்னெடுப்பதையே கஜேந்திரகுமார் பிரதான அரசியலாகக் கொண்டிருக்கின்றார்.
ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியபோதும்கூட, அதற்கு எதிரான பிரசாரங்களையே முன்னெடுத்திருந்தார்.
அதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தங்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை எதிர்த்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் எவ்வாறு செயல்பட்டாரோ அவ்வாறானதோர் அணுகுமுறையையே இப்போது கஜேந்திரகுமார் முன்னெடுத்து வருகின்றார்.
இது ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் அணுகுமுறை போன்ற ஒன்றாகும்.
கூட்டமைப்பு எண்ணிக்கையில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால், அதுவொரு பிரதான தமிழ்த் தேசிய தரப்பாக இருக்கின்றது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும் கஜேந்திரகுமார் தரப்பு கூட்டமைப்பின் அரசியல் தீர்மானங்களை எதிர்ப்பதன் மூலம், அதிக பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றது.
இது அடிப்படையில் பழைய காங்கிரஸ் – தமிழரசு கட்சி முரண்பாட்டை புதிய தலை முறையில் முன்னெடுக்கும் ஓர் உபாயமேயன்றி இதில் எந்தவோர் உன்னதமான அரசியல் நோக்கமும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி தீர்வை பகிரங்கமாக ஆதரித்தால்தான் தாம் பேச்சில் பங்குகொள்வோமென்று கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
இது ஒரு போதுமே நடக்கும் விடயமல்ல என்பதைத் தெரிந்தே கஜேந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஏனெனில், ரணிலோ அல்லது பிறிதொரு சிங்கள அரசியல் கட்சியின் தலைவரோ அவ்வாறானதோர் அறிவிப்பை ஒருபோதுமே முன்வைக்கப் போவதில்லை. ஷ ஏனெனில், அதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் தமிழர் பக்கத்தில் இல்லை.
அது விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்தது.
ஏனெனில், விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ பலத்தின் அடிப்படையில்தான் பேச்சுக்கு சென்றிருந்தது.
எனவே, அந்த அமைப்புடன் ஏனையவர்களை ஒருவர் ஒப்பிடுவாரானால் அது அவரின் அரசியல் முதிர்சியின்மையின் அடையாளமாகவே நோக்கப்படும்.
கூட்டமைப்பின் கடந்தகால அணுகுமுறைகளில் பல தவறுகள் உண்டு.
ஆனால், இம்முறை சில விடயங்களில் கூட்டமைப்பு நிதானமான அணுகுமுறையைக் காண்பித்திருக்கின்றது.
சமஷ்டி அடிப்படையில் பேச்சு என்று கூறி, தொடர்ந்தும் கொழும்பின் தந்திரோபாயத்துக்கு சிக்குப்பட்டதே இதுவரையான (கடந்த 13 வருடங்களாக) கூட்டமைப்பின் அணுகுமுறையாக இருந்தது.
ஆனால், இம்முறை ரணிலின் அழைப்பை பழைய அணுகுமுறைகளுக்கு மாறாகவே கையாண்டிருக்கின்றது.
பேச்சுக்கான புறச் சூழலை ஏற்படுத்தும் நோக்கில் சில முன்னேற்பாடுகளை நிரூபிக்குமாறே கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.
ரணிலின் நகர்வுகளை அவதானித்து, அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்கலாம் என்பதே கூட்டமைப்பின் அணுகுமுறையாகும்.
இவ்வாறனதோர் அணுகுமுறையை கைக்கொள்ளுமாறே புத்தி ஜீவிகளும் கூட்டமைப்பின்மீது அழுத்தங்களை பிரயோகித்து வந்தனர்.
இது தவறு – துரோகமென்று கூறி, அனைத்தையும் நிராகரிப்பதாயின் – அதாவது, தென்னிலங்கை சமஷ்டியை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே நாங்கள் பேசுவோம் என்று ஒற்றைக்காலில் நிற்பதாயின் அதற்கான பலத்தை தமிழர்கள் முதலில் நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறானதொரு பலத்தை நிரூபிப்பதற்கு கஜேந்திரகுமார் இதுவரையில் செய்தது என்ன? கஜேந்திரகுமாரும் கூட்டமைப்பினரை போன்றே பாராளுமன்ற விவாதங்களில் பங்குகொண்டு தனது வாதங்களை முன்வைக்கின்றார்.
அவர்களைப் போன்று ஊடக சந்திப்புக்களை நடத்துகின்றார் – அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
இவற்றின் மூலம் தென்னிலங்கையின்மீது நிர்ப்பந்தங்களை ஏற்படுத்த முடியுமா? எந்தவொரு மாற்று வழியையும் முன்வைக்காமல், அதனை செயல்வடிவில் காண்பிக்காமல், வெறுமனே கூட்டமைப்பின் அனைத்து நகர்வுகளையும் எதிர்த்துக் கொண்டிருப்பதன் பொருள் என்ன? இதனை மாற்று அரசியலென்று கூறலாமா?