கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், வட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையின் செயற்பாடுகளும், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள, கடற்றொழில் அமைச்சில், இன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில், கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன் போது, வட்டவான் பகுதியில், பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட இறால் பண்iணை முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள், வினைத்திறன் இன்றி இருப்பதாகவும், குறித்த பண்ணை அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செயற்பட்டு வருவதாகவும், இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான் இறால் பண்ணையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான குழு ஒன்றை அமைத்துள்ளதுடன், குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் தை மாதத்தில் இருந்து, பண்ணையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, மற்றும் நக்டா நிறுவன தலைவர், பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.