உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுக்களை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஏற்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் விடுக்கப்பட்ட கடிதம், மீள பெறப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.