கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நீக்கல் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க கண்டி பெல்கன்ஸ் அணி 2 விக்கெட்களால் வெற்றியீட்டி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இப் போட்டியில் தோல்வி அடைந்த கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டியில் இருந்து வெளியேறியதுகலம்போ ஸ்ட்ரைக்கர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் 18.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கண்டி பெல்கன்ஸ் 11ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து கண்டி பெல்கன்ஸ் அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தபோது 2 பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 39 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட அண்ட்றே ப்ளெச்சர் 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் ஒரு கட்டத்தில் 11 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
எனினும், சதீர சமரவிக்ரம (62), துனித் வெல்லாலகே (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் சுமார மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
அவர்களை விட ஆரம்ப வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மொஹமத் ஹசன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.