கண்டி – பேராதனை ரயில் சேவை வழமைக்கு

0
105

கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாள பகுதியில் ஏற்பட்ட தாழிறக்கம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஆபத்தான நிலை காணப்படுகிறதா என்பதை கண்காணிக்க இன்று (12) காலை புறப்பட்ட ரயிலில் அதிகாரிகளும் பயணிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். 

அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு பதுளை செல்லும் ‘பொடி மெனிக்கே’ ரயிலானது பயணத்தை ஆரம்பித்திருந்தது. 

அதற்கமைய குறித்த ரயிலானது இன்று காலை 9 மணியளவில் தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்தவித சிக்கலும் இன்றி ரயில் பயணித்ததாக தெரியவருகிறது. 

கடந்த சில நாட்களாக கண்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளம் திடீரென தாழிறங்கியது. 

இந்த தாழிறக்கம் காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதனையடுத்து, கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவைகள் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.