இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் மீதும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதை அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, கனிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கத்தின் ஒன்றியத்தின் உறுப்பினர் அசோக்க ரங்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தபனம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பன நட்டத்தில் இயங்குவதாகவும் இதற்கு இந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கும் கொடுப்பனவு விடயமே காரணம் என்று கூறப்படுகின்றது.
தொழிற்சங்க ஒன்றியம் என்ற முறையில் நாம் ஒரு விடயத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
அதாவது, இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பவற்றை பாதுகாப்பதற்காக அவற்றுக்குக் கீழ் பணியாற்றும் சேவையாளர்கள் கடந்த காலங்களில் பாரியளவில் பணியாற்றியுள்ளனர்.
மாறாக சலுகைளை பெற்றுக்கொண்டு சுகபோகத்தை அனுபவிக்கவில்லை.
அதிகாரிகளுக்கூடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் அதனை கண்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.
எனவே இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகின்றது, எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையங்;கள் நட்டத்தில் இயங்குகின்றன. இவற்றை தனியார் மயப்படுத்த வேண்டும், ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறுவதை உரியவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறுவதனூடாக குறித்த நிறுவனங்களின் பெயருக்கே அபகீர்த்தி ஏற்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான நிறுவனங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதில் பணியாற்றும் சேவையாளர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர்.
எனவே கனியவள கூட்டுத்தாபனத்தை இதுவரை எவ்வாறு பாதுகாத்து வந்தோம் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.