காசாவில் தீவிரமடையும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

0
155

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. அங்கு மற்றுமொரு அகதிகள் முகாம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்- மகாசி அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள நிலையில் அங்கு மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தத் தாக்குதலில் ஆறுபேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் படையினர் காசாவில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது 46 பாலஸ்தீனர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதரப்பு மோதல் ஆரம்பித்த நாள் முதல் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகள் எனக் கருதப்பட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, எகிப்து நாட்டின் உதவியுடன் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படுகின்றன. எனினும் அங்கு உதவிக்காக ஏங்கித் தவித்துவரும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவை போதுமானதாக இல்லை.

காசாவுக்கான நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் காசாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதியளவு நிவாரணங்கள் வழங்குவதில் பல்வேறு தடைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.