ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐந்து மாதங்களிற்குள் காசா முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது.
இஸ்ரேலிய பிரதமரின் இந்த திட்டத்தினால் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கும் ஆபத்து ஏற்படும் உயர் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச்செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது என பல ஹீப்ரூ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தைய பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில்,எஞ்சியுள்ள ஹமாசினை அழிப்பதும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம்
ஹமாசின் பிடியில் 20 பணயக்கைதிகள் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் கருதுகின்றது.
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் காசா நகரிலிருந்து ஆரம்பமாகி மத்திய காசா பள்ளத்தாக்கை நோக்கி நகரும்.
இதன்போது இந்த பகுதியில் உள்ள காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மாவசி மனிதாபிமான வலயத்தை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
சில அமைச்சர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் இந்த திட்டத்திற்கான ஆதரவு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு கிடைக்கும் பாதுகாப்பு அமைச்சரவையின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு கிடைக்கும்.
சிறிய குழுவொன்று கடந்த மூன்று நாட்களாக இது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது இதன் போது காசா மீதான நீண்டகால நடவடிக்கைகளிற்கான பல திட்டங்களை இஸ்ரேலிய இராணுவத்தின் முப்படை பிரதானி லெப் ஜெனரல் எயால் சமீர் முன்வைத்துள்ளார்.

திட்டத்தில் உள்ள விடயங்கள்
காசா நகரை முதலில் கைப்பற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களை விஸ்தரிக்கும் திட்டம் இஸ்ரேலிடம் உள்ளது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக காசா நகரில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் பிறப்பிக்கும்,இந்த நகரில் ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர்.
முதல்கட்டம் பல வாரங்களிற்கு நீடிக்கும்.’
இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையொன்றை ஆரம்பிக்கும்,இதன்போது இஸ்ரேலுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்துவார்.
இஸ்ரேலின் இராணுவநடவடிக்கை நான்கைந்துமாதங்கள் நீடிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்களான வைநெட்,சனல் 13 போன்றவை தெரிவித்துள்ளன.

காசா நகரை கைப்பற்றுவதுடன்,மத்திய காசாவில் உள்ள முகாம்களை நோக்கி செல்லும் திட்டம் உள்ளதாக கான் என்ற ஒலிபரப்புச்சேவை தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய இராணுவத்தினர் இதுவரை மத்திய காசாவை நோக்கி நகராதது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மக்கள் காசாவின் தென்பகுதி நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும்.
பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.
இதேவேளை யுத்த நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்ககூடாது என வற்புறுத்தி வருகின்றன, அமெரிக்கா ஊடாக இந்த செய்தியை இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன.
அதேவேளை ஹமாஸ் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்த நாடுகள் வற்புறுத்துகின்றன.’
இதேவேளை மேலும் அதிகளவு காசா மக்களை தென்மாவாசி நோக்கி நகர்த்துவதே இந்த இராணுவநடவடிக்கையின் நோக்கம் என கான் ஒலிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் காசாவிலிருந்து மக்களை வெளியேறச்செய்யும் திட்டத்திற்கு இது உதவலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
