மன்னார் தலைமன்னார் கிராமத்தில், 10 வயதுச் சிறுமி, நேற்று இரவு காணாமல் போன நிலையில், இன்று அதிகாலை, அப்பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து, தோட்டம் ஒன்றை பராமரித்து வரும் நபர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி உட்பட சிறுமியின் சகோதரர்கள் 4 பேர், தலைமன்னார் கிராமத்தில் உள்ள, அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோர், புத்தளம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து, தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு, 10 வயதுடைய இயான்சி என்ற சிறுமி, அம்மம்மாவின் வீட்டில் இருந்து, அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
கடைக்குச் சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், சிறுமியை தேடி வந்துள்ளனர்.
உறவினர்கள், தென்னம் தோட்டத்திற்கு சென்று, குறித்த சந்தேக நபரிடம் வினவிய போது, தனக்கு எதுவும் தெரியாது என, அவர் பதிலளித்த நிலையில், மீண்டும் தேடியுள்ளனர்.
அதன் பின்னர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவின் காணொளியை பார்வையிட்ட போது, சிறுமியின் பின்னால், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் செல்வது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தி, இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று அதிகாலை, சிறுமியின் சடலம், தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரிடம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவரது அடையாள அட்டையின் மூலம், 52 வயதான கே.வி.அப்துல் ரகுமான், திருகோணமலை குச்சவெளியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
எனினும், சந்தேக நபர், தலைமன்னாரில், தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாக, அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற, மன்னார் பதில் நீதவான், சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன் போது, சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுனத்துவ பொலிஸாரும், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தலை மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, காணாமல் போன 10 வயதுச் சிறுமி, சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மக்கள், வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றவாளி இனங்காணப்பட்டு, அவருக்கு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி, விசாரணை சென்ற பதில் நீதவானிடம், மக்கள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.