காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு – கவலை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு

0
5

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது.

பிரதானமாக சித்திரவதைஇ தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல், துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் அனைத்து ஆணையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், பதில் காவல்துறை மா அதிபர், சட்டம் மற்றும் காவல்துறை மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய காவல்துறை நிர்வாகத்தின் கீழ், திறன் மேம்பாடு, நிறுவன மறுசீரமைப்பு, புதிய நுட்பங்கள் மற்றும் பொறிமுறை ஊடாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் அறிவிக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் விசேட விசாரணைப் பிரிவின் வகிபாகம், குறிப்பாக சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் போகச் செய்தல் போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடைய சட்ட அமுலாக்க அதிகாரிகளை விசாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனைகள் குறைவாக இருப்பது குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.