கிராம மக்களின் வாக்குகளை பொதுசன வாக்கெடுப்பாக மாற்றிக் கொள்ள ஜனாதிபதி முயல்கிறார் – ரணில்

0
2

தேசிய மக்கள் சக்தியினால் ஏமாற்றமடைந்தமையினால் வாக்களிப்பதை புறக்கணிக்காது மாற்று கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் காலியில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காது. ஏனைய கட்சிகள் இணைவதன் ஊடாகவே பெரும்பான்மையை பெறக்கூடிய நிலை உருவாகும். தேசிய மக்கள் சக்தி மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 7 மாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறுகிறார். எனினும் கிராம மக்களின் வாக்குகளை பொதுசன வாக்கெடுப்பாக மாற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி முயல்கிறார்.
கடந்த காலங்களில் அரசியல் செயற்பாடுகளுக்காக காலி முகத்திடலை பயன்படுத்த வேண்டாமென சகல அரசியல் கட்சிகளும் தீர்மானித்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதனை புறக்கணித்து, மே தின கூட்டத்தை அங்கு நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி மிகவும் பாரதூரமானதெனவும் அவர் கூறியுள்ளார். சில நாடுகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த வரி அமுலாக்கம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.எனினும் இலங்கை வணிக பிரதிநிதியிடம் பரிந்துரைகளை மாத்திரமே முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் வணிக பிரதிநிதி என்பவர், இலங்கையில் உள்ள வணிக செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் போன்றவராவார்.

அவர் யார் என்பது அமெரிக்க ஜனாதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோன்று இலங்கையும் இந்தியாவுமே அமெரிக்காவிற்கு யோசனை முன்வைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பின்னர், உப ஜனாதிபதியை இந்தியாவிற்கு வரவழைத்து அவரிடம் யோசனையை சமர்ப்பித்தார். எனினும் இலங்கை அவ்வாறு செய்யவில்லை.

அதேநேரம், அமெரிக்க உப ஜனாதிபதி 4 நாட்கள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமரை இந்தியாவிற்கு அனுப்பி நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியும். இதன்போது கலந்துரையாடி ஏதாவதொரு நிவாரணத்தைப் பெற்றிருக்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் தம்முடன் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த விசாரணைகளுக்காக அமெரிக்காவிலிருந்து எஃப்.பி.ஐ குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தயாராகவிருப்பதாகத் தெரிவித்தார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தம்முடன் நேரடியாக இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம், குறித்த தாக்குதலின் பின்னணியில் மற்றுமொரு முஸ்லிம் குழு இருந்ததாகக் கூறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றது என்றவாறு கருத்துக்களைப் பரப்புகின்றனர்.

எவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.