கில்லின் கன்னிச் சதத்துடன் ப்ளே ஓவ் சுற்றில் குஜராத் : வெளியேறியது ஹைதராபாத்

0
123

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் திங்கட்கிழமை (15) இரவு நடைபெற்ற போட்டியில் ஷுப்மான் கில் தனது முதலாவது ஐபிஎல் சதத்தைக் குவிக்க, நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியில் மொஹமத் ஷமி, மோஹித் ஷர்மா ஆகியோரின் 4 விக்கெட் குவியல்களும் முக்கிய பங்காற்றின.

ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா 3ஆவது பந்தில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மற்றைய ஆரம்ப வீரர் ஷுப்மான் கில், 3ஆம் இலக்க வீரர் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 147 ஓட்டங்களின் உதவியுடன் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.

ஷப்மான் கில் 58 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 101 ஓட்டங்களைக் குவித்தார். சாய் சுதர்சன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

சாய் சுதர்சனின் விக்கெட் உட்பட 8 விக்கெட்கள் வெறும் 41 ஓட்டங்களுக்கு சரிந்தன. குஜராத்தின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

ஐபிஎல் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடந்த வருடம் முதல் தடவையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்குபற்றி சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் இந்த வெற்றியுடன் முதலாவது அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றதுடன் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதை உறுதிசெய்துகொண்டது.

7 வருடங்களுக்கு முன்னர் சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்முறை ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பை இழந்தது. டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு அடுத்ததாக இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை இழந்த இரண்டாவது அணி ஹைதராபாத் ஆகும்.

குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவ்களில் 9 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

9 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் 7 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும் ஹென்றிச் க்ளாசனும் புவ்ணேஷ்வர் குமாரும் 8ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

க்ளாசன் 64 ஓட்டங்களையும் புவ்ணேஷ்வர் குமார் 27 ஓட்டங்களையும் மயான்க் மார்கண்டே ஆட்டம் இழக்கமால் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனையவர்கள் 10 அல்லது அதற்கு குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மோஹித் ஷர்மா 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்துள்ள 23 வயதான ஷுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றெடுத்தார்.