கிளிநொச்சி பளைப் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி, பளைப் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியும், பளைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், மதுவரித் திணைக்களத்தினரால் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.
கைதான இருவரும், கொழும்பு பொலிஸ் தலைமையைக்தில் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு கடுவல நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது, பொலிஸார் சார்பில் சட்டத்தரணி அர்ச்சனா, சட்டத்தரணி எஸ்.விஜயராணி உள்ளிட்ட சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பத்தை முன்வைத்த போதிலும், அது நிராகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஏற்கனவே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.