மட்டக்களப்பு பழைய மாவட்டச் செயலக வளாகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின், நடமாடும் சேவை இன்று நடைபெற்ற வேளை, மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஆளுநரைச் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
தமது தொழிலுரிமையை வழங்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்றைய நடமாடும் சேவையின் போது, தமது கோரிக்கைகளை ஆளுநரிடம் நேரடியாக முன்வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர்,
பட்டதாரிகள் சங்கத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு கிழக்கு மாகாணத்தில் நீடிக்கும் ஆசிரியர்களுக்கான ஆளணி பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.