குடும்ப அரசியலுக்கு இடமில்லை!: அனுர பிரியதர்ஷன யாப்பா

0
124

தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டு மக்களை வீதிக்கிறக்கியவர்கள் தற்போது ஒன்றிணைந்து எழுவோம் என மக்கள் மத்தியில் செல்கின்றமை நகைப்புக்குரியது. குடும்ப அரசியல் இனி தலைதூக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகித்தோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரேஷ்ட அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவில்லை. முறைமை மாற்றம் என குறிப்பிட்டுக் கொண்டு வியத்மக தரப்பினர் வழங்கிய தவறான ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கினார்.
சேதன பசளை திட்டம் எவ்வித தூரநோக்கமற்ற முறையில் அமுல்படுத்தியதால் நாட்டின் உணவு பாதுகாப்பு இன்று மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டமை தவறான தீர்மானம் என்பதை அரசாங்கத்தில் இருந்து கொண்டு எடுத்துரைத்தோம்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் எமக்கு அரசாங்கத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை. விவசாயத்துறை தொடர்பான தவறான தீர்மானம் இன்றைய பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணி என்பதை எவராலும் மறுக்க முடியாது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்பதால் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகின்றோம். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையாது. தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் தற்போது ஒன்றிணைந்து எழுவோம் என குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் செல்கின்றமை நகைப்புக்குரியது. மீண்டும் ஒன்றிணைந்து எழுவதற்கு ஒன்றுமில்லை. தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை. ஜனநாயகம் என குறிப்பிட்டு கொண்டு ஒரு குடும்பத்தின் அரசியல் நாட்டு மக்களை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தெளிவாக உள்ளமை வரவேற்கத்தக்கது என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.