பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பான போத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதை அருந்திய பின்னர் திடீர் சுகவீனமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குளிர்பானத்தை குடித்த பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக 8 வயது சிறுமி நேற்று (12) மதியம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் சுகயீனத்திற்கான காரணத்தை அறிவதற்காக சிறுமியின் தந்தையும் குளிர்பானத்தில் இருந்து சிறிது குடித்திருந்தார். பின்னர் அவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தற்போது சிறுமியும் அவரது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குளிர்பானத்தை குடித்த பிறகு அவரது வாய் எரிவது போல் உணர்ந்ததாக தந்தை குறிப்பிட்டார். இருப்பினும் உணவகத்தில் உள்ள அனைத்து குளிர்பான போத்தல்களும் தற்போது சீல் வைக்கப்பட்டு தொடர்புடைய பான போத்தல்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பிறகு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.