முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், இன்றைய ஏழாம் நாள் பணிகளின் நிறைவில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன், ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
அத்துடன், இன்று, மூன்றாவது நாளாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் இருந்து, மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில், இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வுகளின் போதும், 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன், இதுவரை 43 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.