இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் முதலாவது கொரோனா அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இந்த முறை ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னரான காலத்தில் மீன் விற்பனையாளர்கள், போலீஸார், ஊடகவியலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோவிட் கொத்தணி, பின்னர் பேலியகொட மீன் சந்தையில் பரவியிருந்தது.
இந்த நிலையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட கோவிட் கொத்தணிகளின் ஊடாக இதுவரை சுமார் 6000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இந்த தொற்றின் பின்னர், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் அச்சப்படுவதை காண முடிகின்றது.
பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை அண்மை காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவி வருகின்றமையினால், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை பெருமளவு நிறுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று மீனவர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
கோவிட்-19 தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், மீனவ கிராமமான சிலாபம் – வெல்ல பகுதியிலுள்ள வர்ணகுலசூரிய இனோகா டிஷானியை பிபிசி சந்தித்து விடயங்களை ஆராய்ந்தது.
‘எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். எனது கணவர் கடற்றொழிலில்; ஈடுபடுகின்றார். அவர் கொண்டு வரும் மீன்களை நான் விற்பனை செய்வேன். அதன் மூலமே எமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம். இந்த கொரோனா பிரச்சினை காரணமாக எமக்கு வாழ முடியவில்லை. மீன்களை சாப்பிட, மக்கள் அச்சப்படுகின்றனர். இன்று 4 கிலோ மீன்களை கூட விற்பனை செய்ய முடியவில்லை”
பேலியகொட மீன் சந்தையிலுள்ள மீனவர்களுக்கு மத்தியில் பரவிய கோவிட்-19 தொற்றினால், அது இன்று முழு மீனவ சமூகத்தையே பாதிப்புக்குட்படுத்தியுள்ளது.
கோவிட் பரவலை அடுத்து, பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கியமான பல மீனவ துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளமையினால், மீனவர்கள் இன்று பாரிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு உரிய வேலைத்திட்டம் கிடையாது
நாட்டிலுள்ள அனைத்து மீன்களையும் அரசாங்கம் கொள்வனவு செய்யும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு முன்பாக கூறிய போதிலும், அதற்கான உரிய வேலைத்திட்டமொன்று இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என மீனவரான நிஹால் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
லட்சக்கணக்கான கிலோகிராம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பிரச்சனையினால் கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி, மீன் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மீனவ சங்கத்தின் பதில்
மீனவர்கள் தற்போது பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமையினால், அரசாங்கம் தலையீடு செய்து உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலாபம் கிராமிய மீனவ மாவட்ட அமைப்பின் செயலாளர் அன்டன் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
மீன்களை உட்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமற்றது என நாட்டு மக்கள் மத்தியில் எண்ணமொன்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எண்ணத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உரிய கருத்தொன்றை வெளியிடாதுள்ளதாகவும், சுகாதார பிரிவினர் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான பின்னணியில் மக்கள் சந்தேகத்துடனேயே வாழ்ந்து வருவதாக அவர் கூறுகின்றார்.
அதனால், அரசாங்கம் உறுதியான பதிலொன்றை வழங்க முன்வர வேண்டும் என சிலாபம் கிராமிய மீனவ மாவட்ட அமைப்பின் செயலாளர் என்டன் சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச கடற்றொழில் சம்மேளனத்தின் இலங்கை பிரதிநிதியும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டாளருமான ஹர்மன் குமாருடன், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
நாட்டிலுள்ள மீனவர்கள் பிடித்துள்ள மீன்களை காலம் தாமதிக்காது, அரசாங்கம் கொள்வனவு செய்து, அவற்றை பழுதடையாத வகையில் களஞ்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மீன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதாவது, கடலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகள், மீண்டும் கரைக்கு வரும் போது, அவர்களினால் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீன்களின் ஊடாக கொரோனா பரவுமா? இல்லையா? என்பது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான நிலைப்பாட்டை சுகாதார பிரிவினர் வெளியிட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
20 லட்சம் பேரின் வாழ்வாதாரம்?
கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் பிரகாரம், இலங்கையில் சுமார் 20 லட்சம் பேர் கடற்றொழிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்பி வாழ்ந்து வருகின்றார்.
அத்துடன், கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டு செயலணி அறிக்கையின் படி, அந்த ஆண்டின் மொத்த மீன் உற்பத்தி 527,060 மெட்ரிக் டன் ஆக காணப்படுகின்றது.
2019ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், கடற்றொழில் துறையின் ஊடாக நாட்டின் தலா தேசிய உற்பத்திக்கு 1.1 வீதம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 2018ஆம் ஆண்டு 1.2 வீதம் கடற்றொழிலினால் தலா தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில்
மீனவர்களுக்கு மத்தியல் மூன்று விதத்தில் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்ட நிலையில், இந்திய மீனவர்களின் ஊடாக நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், வைரஸ் நாட்டிற்குள் பரவி, அது வேகமாக பரவுவதற்கான அபாயமும் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மூன்றாவதாக, மீனவர்களுக்கு மத்தியில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
மீனவர்களுக்கு மத்தியில் கொவிட் தொற்று பரவுகின்றமையினால், மீன்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக அவர் கூறுகின்றார்.
மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என விஞ்ஞான ரீதியில் இதுவரை எங்கும் உறுதிப்பட தெரிவிக்கவில்லை என அவர் நினைவூப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பதில்
மீன்பிடி துறைமுகங்களின் பிடித்து சேமிக்கப்பட்டுள்ள மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
மீன்களின் ஊடாக கோவிட் தொற்று பரவும் அபாயம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீன்களை கொள்வனவு செய்து சாப்பிடுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீனவ சமூகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையாக கடற்றொழில் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், உள்நாட்டு தொழில்துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை இந்த சந்தர்ப்பத்தில் கைவிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மீன்களை உட்கொள்வதினால், எந்தவொரு சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்று ஏற்படாது என ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் மற்றும் சமுத்திர ஆய்வு, தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரினங்கள் பிரிவின் பேராசிரியர் ருச்சிரா குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.
கொரோனா ஏற்படும் என மீன்களை உட்கொள்ளாதிருப்பது முட்டாள் தனமான விடயம் எனவும் அவர் கூறுகின்றார்.
கொரோனா வைரஸ் மீன்களுக்குள் செல்ல வாய்ப்புக்கள் மிகவும் குறைவு எனவும், அவ்வாறு மீன்களுக்கு வைரஸ் சென்றாலும், மீன்களை நன்றாக கழுவி அதிக வெப்பத்தில் சமைத்தால், வைரஸ் தொற்றை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.
70 செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேலாக வெப்பம் காணப்படுமாக இருந்தால், குறித்த வைரஸ் முற்றாக இல்லாது போயிவிடும் எனவும் அவர் கூறுகின்றார்.
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மீன்கள் சமைக்கப்படுமாக இருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாது என பேராசிரியர் ருச்சிரா குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி