கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கக்கூடிய காலம், செலவு உட்பட பல விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது இலங்கை கொரோனா வைரஸ் தொற்று மருந்தை மட்டும் நம்பியிருக்க முடியாது என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாறான தொற்று நோய்கள் காணப்படுகின்ற போது அவற்றைக் கட்டுப்படுத்தவே முன்னுரிமை வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் மருந்து இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இதனால் அது கிடைக்க இன்னும் ஆறு மாதங்களாகும்.
கொரோனா வைரஸ் மருந்து தயாரானதும் தடுப்பூசி கருவிகள் சில இலங்கைக்கு இலவசமாகக் கிடைக்கலாம். ஆனால், ஏனையவற்றை அரசாங்கம் பணம் செலுத்தியே பெறவேண்டியிருக்கும். அதற்கு பெரும் செலவாகும்.
தற்போதுள்ள விலைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் கொரோனா தடுப்பு மருந்தின் விலை 1500 ரூபா முதல் 4500 ரூபா வரையிலானதாகக் காணப்படலாம்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளியொருவருக்கு ஆரம்பத்தில் மருந்துகள் கொடுக்கப்பட்ட அதன் நோய் எதிர்ப்புச் சக்தி ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கும்; என்பது தற்போதைய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் ஒவ்வொரு வருடமும் மருந்தை வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் மருந்துக்கு மிகப்பெரும் தேவையுள்ளதால் எந்த நிறுவனத்தாலும் அந்தத் தேவையை, எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய முடியாது. வலுவான நாடொன்று அதிக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் அந்த மருந்துக்குப் பெரும் தட்டுப்பாடு கூட ஏற்படலாம்.
இதனைத் தவிர்க்க உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பு மருந்தை சமமாக விநியோகிக்க பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.