கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் உண்மை தவல்களையே நாட்டுக்கு தெரிவித்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களும் தமது ஆலோசனைகளை ஏற்று கைகளை கழுவுதல் , முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிகளை கடைப்பிடித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தை பிற்போடுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகள் காரணமாகவே மினுவாங்கொடை பிரண்டெக்ஸ் நிறுவனப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டமை இனங்காணப்பட்டது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் பாராட்டு தெரிவித்திருந்தது.
இதேவேளை, விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யும் நாடுகளும் குறைவாகவே உள்ளன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றையும் அமைத்துள்ளதுடன், சுகாதார அமைச்சர் என்றவகையிலே அது தொடர்பான செயல்பாட்டு குழு ஒன்றை அமைத்து மேற்பார்வை செய்து எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன்.
நாட்டு மக்களும் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அந்த வகையில் அரசாங்கம் கொரோனா தொற்றுப் பரவல் குறித்த உண்மைத் தகவல்களையே நாட்டு மக்களுக்கு வழங்குகின்றது’, என்றும் அவர் தெரிவித்தார்.