கொழும்பின் முக்கிய பகுதியில் புகைப்படம் எடுக்க கட்டணம் செலுத்த தேவையில்லை!

0
217
A young woman using a DSLR camera

கொழும்பு துறைமுக நகரில் புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ள மெரினா நடைபாதையில் செல்ஃபி எடுப்பதற்கும், தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில், செல்ஃபி படங்களை எடுப்பதற்கும், காணொளிகளைப் பதிவு செய்வதற்குக் கொழும்புத் துறைமுக நிறுவனம் கட்டணம் அறவிடுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொழும்புத் துறைமுக நகர பகுதியில், விழாக்கள் மற்றும் வணிக ரீதியில் பதிவு செய்யப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனிப்பட்ட நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், வணிக விளம்பரங்கள் ஆகியனவற்றுக்காக எடுக்கப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் முறைமை குறித்த கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்றும் கட்டணப் படப்பிடிப்பையும் புகைப்படக்கலையையும் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது கோரப்பட்ட ஏனைய நேரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்திற்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் அல்லது கேமராக்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புகழ்பெற்ற சமூக அல்லது பிரதான ஊடக நிலையங்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதியுடன் செய்திகள் அல்லது நடப்பு விவகாரங்களை படமாக்குதல், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விழாக்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது பேஷன் விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது வேறு வகையான வணிகப் படப்பிடிப்பின் படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் பொருந்தும் என்றும் கொழும்புத் துறைமுக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.