கொழும்பின் ராஜதந்திரம் புரிகின்றதா?

0
149

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, கையெழுத்து சேகரிக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிறிதொரு புறம், திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்திற்குள், தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினை பேசப்படுகின்றது.
இன்னொருபுறம் குருந்தூர் மலையில் பௌத்த விகாரை நிறுவும் விடயம் விவாதிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர், வலிவடக்கில் கடற்படையினர் காணி பிடிப்பதான பிரச்சினையில் கவனம் செலுத்தப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் மீனவர் பிரச்சினை பேசு பொருளாக இருந்தது.
இந்தப் பின்புலத்தில் வடக்கு மாகாணத்தின் மீனவர்களை சீனத் தூதுவர் சந்தித்திருந்தார்.
பின்னர் அது ஒரு அரசியல் விவகாரமாக மாறிது.
அது பற்றியும் தமிழ் பகுதிகளில் சலசலப்புக்கள் இடம்பெற்றன.
இவ்வாறு பேசப்படும் ஒவ்வொரு விடயத்தையும் எடுத்து நோக்கினால், அனைத்து விடயங்களும் சில நாட்களுக்கு பேசுபொருளாக இருக்கும் பின்னர் மறைந்துவிடும்.
இவ்வாறு தான் கடந்த சில வருடங்கள் நகர்ந்திருக்கின்றன.
இதனை ஆழமாக நோக்கினால், தமிழ் தலைமைகள் என்போரின் கவனம் முழுவதும் சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதை காணலாம்.
ஆனால், இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது அரசியல் தீர்வற்ற சூழலாகும்.
அரசியல் தீர்வின்றி இவ்வாறான பிரச்சினைகள் எதனையுமே நிரந்தரமாக தீர்க்க முடியாது.
ஆனால் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வான அரசியல் தீர்வை காணும் விடயத்தில் ஒரு உறுதியான நகர்வை, தமிழ் தேசிய தரப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, மேற்கொள்ள முடியவில்லை.
இதனைத்தான் கொழும்பும் விரும்புகின்றது.
நடைபெறும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் எடுத்து நோக்கினால், சிறிய, சிறிய விடயங்களில் தமிழர் தரப்புக்களின் கவனத்தை சிதறடிப்பதே, இதற்கு பின்னாலிருக்கும் தந்திரமாகும்.
ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
பல்வேறு வாதப்பிரதி வாதங்களுக்கு பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு கோரியிருந்தனர்.
ஆனால் கடிதத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் விடயங்களை குறித்த கட்சிகள் முன்னெடுக்கவில்லை.
விடயங்களை மிகவும் திட்டமிட்டு முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ் கட்சிகளோ அவ்வப்போது அரசியல் பரப்பில் எட்டிப்பார்க்கும் – அதாவது, மழைக்காலத்து ஈசல்கள் போன்று தோன்றும் பிரச்சினைகள் மீது தங்களின் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பிரச்சினைகளின் ஆணி வேரை விட்டுவிடுகின்றனர்.
இதுதான் சிங்கள ராஜதந்திரத்தின் இலக்காகும்.
தமிழ் கட்சிகளின் கவனத்தை சிதறடிக்கும் நோக்கில்தான், அவ்வப்போது புதிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஆனால் இவ்வாறு அவ்வப்போது பூதாகரமாக்கப்படும் பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வையும் காண முடியவில்லை.
உதாரணமாக மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.
சுமந்திரன் கடலிலும் வித்தியாசமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அந்த நடவடிக்கைகளின் விளைவாக பிரச்சினை தீர்ந்ததா? இல்லையே! இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கையெழுத்துக்களை சேகரிக்கின்றார்.
இதன் பயன் என்ன? சிங்கள ராஜதந்திரம் எதனை விரும்புகின்றதோ – அதனையே தமிழ் தேசிய கட்சிகள் என்பன, மிகவும் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றன.
இந்திய பிரதமரை அணுகிய கட்சிகள், அதனடிப்படையில் புதுடில்லியின் ஊடகங்கள், மற்றும் அயலுறவு கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் சிந்தனைக் கூடங்களுடன் ஊடாடியிருக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை, இந்திய மட்டத்தில் பேசு பொருளாக்கியிருக்க வேண்டும் அல்லது மீண்டுமொரு கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும்.
முன்னேற்றங்கள் தொடர்பில் இந்திய தூதரகத்தோடு உரையாடியிருக்க வேண்டும்.
ஆனால், அது தொடர்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் என்போரால் சிந்திக்க முடியவில்லை ஆனால் மாறாக, சிறிய விடயங்களில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.