28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு ஆமர்வீதியில் இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கை: போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்

நாடளாவிய ரீதியில் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அல்லாடி கொண்டிருக்கும் தலைநகர் வாழ் மக்கள், தமக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு ஆமர்வீதியை வழிமறித்து நேற்று முற்பகல் ஆரம்பித்த போராட்டம், இரண்டாவது நாளாகவும் இன்று (8) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கொட்டாஞ்சேனையிலிருந்து சுமணமாவத்தைக்கு செல்லும் வீதி, கொட்டாஞ்சேனையிலிருந்து சங்கராஜமாவத்தைக்கு செல்லும் வீதி, வத்தளையிலிருந்து புறக்கோட்டைக்கு செல்லும் வீதி, புறக்கோட்டையிலிருந்து வத்தளைக்கு செல்லும் வீதி, கிராண்ட்பாஸுக்கு செல்லும் வீதி என்பன மூடப்பட்டுள்ளன.

இதனால், பஞ்சிகாவத்தை, மருதானை, பொரளை ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து திருப்பியனுப்பும் செயற்பாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியில் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்தும் பிரதான வீதியில் விறகு அடுப்பை மூட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஏனைய இடங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் செல்கின்றன எனினும் எமக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் சமைப்பதற்கு வழியில்லாமல் உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சமையல் எரிவாயு கோரி கொழும்பில் சில இடங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles