கோட்டாபயவின் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்காகவே 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21ஆவது திருத்தமே நாட்டுக்கு சிறந்தது. இருந்தபோதிலும், கோட்டாபயவின் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்காகவே 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோம்.
மொட்டு அமைச்சுக் குழுக்களில் பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டு கடந்த காலங்களில் மக்களுக்காக முன்நின்ற மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் சுயாதீன தலைவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரச அதிகாரத்தை துஷ;பிரயோகம் செய்ய இடமளிக்கபோவதில்லை.
எப்போதும் மக்களுக்காகவே முன்நின்ற தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் சுயாதீனத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும்.
அந்த தலைவர்களின் கடமைகளில் தலையிடாமல் முடிந்தால் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.
நல்லாட்சிக்காகவே 22ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தோமேயன்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி ரோஹினி மாரசிங்கவையோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவையோ வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல.
இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. அவ்வாறு செயற்பட முற்பட்டால் எந்நேரத்திலும் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடுவோம்.
ராஜபக்ஷக்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபக்சவினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்காமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. ராஜபக்சவினர் தமது குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சிக்கினறனர்.
இது மீண்டும் நாட்டை அழிப்பதற்கான முயற்சியாகும்.