கோட்டா, மஹிந்த உள்ளிட்ட நான்கு இலங்கையர்களுக்கு தடை விதித்தது கனடா!

0
198

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்களுக்கு, கனடா நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தி கனடா அவர்கள் மீது இவ்வாறு தடைகளை விதித்துள்ளது. அவர்கள் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இதனை அறிவித்துள்ளார். இந்தநிலையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள், நீதிக்கு தகுதியானவர்கள் விடயத்தில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் முக்கிய குழு உட்பட சர்வதேச பங்காளிகளுக்கு கனடா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கனேடிய அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.