சகல உரிமைகளும் மலையகத்தவர்களுக்கு வேண்டும் – நுவரெலியாவில் விசேட வேலைத்திட்டம்

0
59

இலங்கை நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சகல உரிமைகள் , நன்மைகள் உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும்.

2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலமாவது மலையக மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் (05) வியாழக்கிழமை விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டம் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது மலையக மக்களுக்கு தற்போது தேவையான சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் நின்று அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

பின்னர் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் உள் அரங்கில் டிஜிட்டல் காணொளி மூலம் 07 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மலையக மக்கள் தற்போது எதிர்நோருக்கும் பிரச்சனைகளையும் மலையக மக்களின் வாழ்வியல் வரலாறு மற்றும் எதிர்காலத்தில் மலையக மக்களுக்கு  தேவையான பெறுமதி மிக்க சேவைகளையும் டிஜிட்டல் திரையில் காண்பித்து பொது மக்களின் விமர்சனங்களையும் கேட்டறிந்து அதற்கான உரிய பதில்களும் வழங்கப்பட்டது, இதில் பொருளாதார அந்தஸ்தை விருத்தி செய்வதற்கான புதிய கொள்கைகளும் முன்மொழியப்பட்டன.

இதில் அதிகமாக மலையகத்தின் தற்போது கல்வி திட்டத்தின் எதிர் நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் , சில முக்கிய நிறுவனங்களின் தமிழ் மொழி முற்றாக புறக்கணித்து ஏனைய மொழிகளை மாத்திரம் உபயோகித்து வருகின்றன இதற்கான காரணங்களும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்ச்சியில் அதிகமாக பெருந்தோட்டத் துறையில் அதிகமாக முகம் கொடுக்கும் காணி மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு இதற்கு மலையக மக்கள் எவ்வாறான செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்டது இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .