சகல மட்டங்களிலும் சூரிய மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை கொண்டு செல்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சூரிய மின்னுற்பத்தி வேலைத்திட்டமானது அரச நிறுவனங்கள் பலவற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், சூரியக்கல மின்னுற்பத்தி தொடர்பிலான அவதானம் அதிகரித்துள்ளது.
இதற்கமைவாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சானது மூன்று நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
அந்த நிறுவனங்களுக்கூடாக பெற்றுக்கொள்ளும் கடனுதவியின் மூலம் மத வழிபாட்டு தளங்களுக்கு மட்டுமல்ல வியாபார நிலையங்கள், ஹோட்டல், அரச கட்டடங்களுக்கு வெவ்வேறான கடன் திட்டங்களின் மூலம் நுகர்வோரின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் சூரியக்கல மின்னுற்பத்தியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் இரு பிரதான அரச வங்கிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கும் மேலாக இந்தியா கடனுதவி திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ரீதியிலான வேலைத்திட்டங்களை நாம் பூர்த்தி செய்துள்ளோம்.
விநியோகஸ்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போதைய நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழும் 2000 வணக்கஸ்தலங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளின் கூரைகளிலும் சூரியக்கல மின்சாரத்தை பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்வியமைச்சின் சகல பாடசாலை கட்டடங்களிலும் சூரியக்கல மின்னுற்பத்தியை பொறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீடுகளுக்கும் இந்த சூரியக்கல மின்னுற்பத்தியை பொறுத்தவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
மாகாண சபைகளின் மட்டத்திலும் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விவசாய அமைச்சுடன் இணைந்தும்கூட தொழிற்சாலைகளுக்கும் தேவைக்கேற்ப இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.