சசிகலா, இளவரசிக்கு பிடியாணை

0
71

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில்  விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி மற்றும்  சுதாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டனர்.

அப்போது சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்திற்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளான மருத்துவர் அனிதா, சுரேஷ் கஜராஜ் மற்றும்  சசிகலா,  இளவரசியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.  

முதல் வாய்தாவுக்கு ஆஜரான சசிகலா தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது. 

இதனையடுத்த பல முறை நடைபெற்ற விசாரணையில் சசிகலா மற்றும் இளவரசி ஆஜராகவில்லையென கூறப்படுகிறது. 

இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் இன்றைய வழக்கு விசாரணையின் போதும் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிபதி ராதாகிருஷ்ணன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

மேலும் இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

சசிகலாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட செய்தி அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.