28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சஜித்தின் புதிய அரசியல் யாப்பு!

சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றவுடன் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று அந்தக் கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜித் பெரேரா தெரிவித்திருக்கின்றார். தான் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது அவரின் கட்சியை சேர்ந்தவர் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசியிருக்கின்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போதே வாக்குறுதியில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறாயின், ஒருவேளை சஜித் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? பிரதான வேட்பாளர்களில் யாரோ ஒருவர் ஆட்சிக்கு வருவார். அது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், புதிய அரசியல் யாப்புக் கதையை எவ்வாறு நோக்குவது? ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்புக் கதை அதிகம் பேசப்பட்டது. யாப்பு வந்துவிடப் போவதான ஒரு மாயையும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், என்ன நடந்தது? முதலில் புதிய அரசியல் யாப்பு பற்றி பேசுவதே அடிப்படையில் ஓர் அரசியல் கற்றுக்குட்டித்தனமாகும். இலங்கைத் தீவில் புதிய அரசியல் யாப்பு வரமுடியும். ஆனால், அந்த யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் என்று எண்ணினால் அவர்களை விடவும் அரசியல் விடலைகள் வேறு யாரும் இருக்க முடியாது.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். அதாவது, இலங்கைத் தீவு எப்போதுமே, ஓர் ஒற்றையாட்சி கட்டமைப்பின் கீழ், ஒரு பௌத்த – சிங்கள நாடாக இருக்க வேண்டும். அதற்குக் குந்தகமான எந்தவொரு விடயத்தையும் அனுமதிக்கக்கூடாது – அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதில் பௌத்தமத பீடங்கள் உறுதியானதும் – இறுக்கமானதுமான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்புத்தான் பௌத்த மதபீடங்களுக்கும் இராணுவத்துக்குமான பாதுகாப்பாகும். ஒற்றையாட்சி நீக்கப்பட்டால் இருவரும் அவர்கள் இதுவரை அனுபவித்து வந்த அதிகாரங்கள் அனைத்தையும் ஒரேநாளில் இழந்துவிடுவர். இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால் எந்தவொரு தென்னிலங்கை ஆட்சியாளரும் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சிந்திக்கக்கூடத் துணிய மாட்டார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கக்கூட மாட்டார்கள். ஆனால், ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர்.

வரமுடியாத அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரப் போவதாகக்கூறி கூட்டமைப்பு காலத்தை வீணாக விரயம் செய்து கொண்டிருந்தது. அன்று புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியை ஆதரித்தவராகக் கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவே இன்று பொலிஸ் அதிகாரத்தை ஒரு பக்கமாக வைத்துவிட்டு அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறுகின்றார்.

அவ்வாறாயின், முன்னைய ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட புதிய அரசியல் யாப்பு கதைகள் அர்த்தமற்றவவை என்பதுதானே பொருள். அரசியல் தீர்வுக் கதைகளை இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்களை நம்பவைக்க முடியும்? மைத்திரி ஆட்சிக் காலம் தெளிவான படிப்பினையை வழங்கியிருக்கின்றது. இப்போது, தமிழ் மக்கள் செய்யவேண்டியது ஒன்றுதான், நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் தீர்வைத் தருவார்கள் – நம்புங்கள் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்று சொல்வதுதான்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles