எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசமைப்பின் பதின் மூன்றாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தொடர்ந்தும் உச்சரித்து வருகின்றார். பிரதான வேட்பாளர்கள் அனைவருமே அவ்வாறுதான் கூறுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க மட்டும் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த பதின்மூன்று தொடர்பில் பேசிவருகின்றார். ஆனால், இதிலுள்ள அடிப்படையான விடயம் சஜித் பிரேமதாஸவும் அது பற்றித்தான் பேசுகின்றார்.
ஆனால், அவர் வெளிப்படையாகக் கூறாமல் பதின்மூன்று என்று பொதுவாகப் பேசி வருகின்றார். தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும்போதும் இதனை வலியுறுத்தி வருகின்றார். ஆனால், சஜித் பிரேமதாஸ பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் என்று எங்குமே குறிப்பிடவில்லை. தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அதனை அவரிடம் கோரவில்லை. பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் இருக்கும் ஒன்று – அது தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வல்ல என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எண்ணி னால் அவர்கள் தாங்கள் எதிப்பார்க்கும் விடயங்களை பிரதான வேட்பாளர்களிடம் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.
தங்கள் கோரிக்கைகள் உள்ளடங்கிய வெளிப்படையான உடன்பாட்டை கோர வேண்டும். அதற்கு பிரதான கட்சிகள் இணங்க வில்லையாயின், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை உறுதி யாக முன்னெடுக்க ஒன்றுபட வேண்டும். ஆனால், தமிழ் கட்சிகளின் அணுகுமுறைகள் ‘மதில் மேல் பூனை’ யாகவே இருக்கின்றன. இது அடிப்படையிலேயே தவறானது.
ஒன்றில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்கொண்டுசெல்ல உழைக்க வேண்டும் அல்லது தென்னிலங்கை வேட்பாளர்களில் ஒருவரோடு தெளிவான உடன் பாட்டுக்கு செல்ல வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கினால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பில் – சுமந்திரனின் நிலைப்பாடு மட்டுமே தெளிவானது. அதாவது, தமிழ் பொது வேட் பாளர் நிலைப்பாட்டை சுமந்திரன் வன்மையாக எதிர்க்கின்றார்.
பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை சஜித் பிரேமதாஸ நிச்சயமாக அமுல்படுத்தப் போவதில்லை. தென்னிலங்கை சக்திகள் அனைத்தையும் கடந்து செல்லக்கூடிய துணிவுள்ள தலைமைத்துவம் சஜித் பிரேமதாஸவிடம் இல்லை. கடும்போக்குவாதிகள் எதிர்த்தால் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி அதிகாரத்தைக்கூட சஜித் அமுல்படுத்துவதை கைவிட்டுவிடுவார்.
அரசியல் அனுபவமுள்ளவர்கள் என்று தங் களை கருதிக்கொள்ளும், தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த அடிப்படை உண்மை விளங்கவில்லையா? ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின்போதும் சில மந்திரங்களை தென்னிலங்கை வேட்பாளர்கள் உச்சரிப்பதுண்டு. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ஷ பதின்மூன்று பிளஸ் என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். ‘நல்லாட்சி’ என்று சொல்லப்பட்ட காலத்தில் ‘புதிய அரசியல் யாப்பு’ என்னும் மந்திரம் உச்சரிக்கப்பட்டது. கூட்டமைப்பும் அதனை உச்சரித்து பூரிப்படைந்தது. இன்றைய சூழலில், ஒரு நெருக்கடியான தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தென்னிலங்கை வேட்பாளர்கள் அனைவருமே பாரபட்சமில்லாமல் தற்போது ’13’ மந்திரத்தை உச்சரித்துவரு கின்றனர்.
இதனை நம்பி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – மீண்டும் ஒருமுறை ஏமாந்து போகவேண்டும் என்பதுதான் தமிழ் கட்சிகளின் விருப்பமா? தமிழ்த் தேசிய அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியினர் கடந்த பதினைந்து வருட கால அரசியல் அனுபவங்களிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொள்ளமாட்டார்களா?