அரசாங்கத்தின் கொள்கை ஓர் இனத்தை ஓரங்கட்டுவதாகவே இருந்தது என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றார். கோவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசுகின்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தி ருக்கின்றார். இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாகவே கையாண்டு வந்திருக்கின்றன.
இதன் விளைவாகவே உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. இதன் விளை வாகவே நாடு வங்குரோத்து நிலைக்குள் சிக்கியிருக்கின்றது. ஆனால் சஜித் பிரேமதாஸவோ, சிறு குழந்தைகள் போன்று பேசியிருக்கின்றார். சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் காலத்திலிருந்து இன ஒதுக்கலும் – இன ஒடுக்குமுறையும்தான் இலங்கையின் உள்நாட்டு கொள்கையாக இருந்தன. இதன் விளைவாக இடம்பெற்ற தமிழ் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்துவிட்டதாகக் கூறப்படும் கடந்த பதினைந்து வருடங்களில்கூட தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை சார்ந்து ஆகக் குறைந்த நிலையில்கூட தென்னிலங்கை எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை.
கடந்த பதினைந்து வருடங்களில் அதிகார அரசியலை தன்வசப்படுத்தும் போட்டி அரசியலுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தவர்தான் சஜித் பிரேமதாஸ. இந்தக் காலத்தில், தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைகள் – இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சஜித் முன்னேற்றகரமான கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை. இவ்வாறானதொரு பின் புலத்தில், அரசாங்கத்தின் கொள்கையென்று ஒரு சொல்லில் அனைத்தையும் ராஜபக்ஷக்கள்மீது சுமத்திவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க முற்படுவதானது அடிப்படையிலேயே தவறானது. தவிர, இலங்கை அரச கொள்கையை ஒரு சிலரின் கொள்கையாக காண்பிக்க முற்படும் முயற்சியாகும்.
அடுத்து கதிரையில் அமரப் போவது யார் என்னும் போட்டியில் தனக்கான வாய்ப்பை உச்சமாக எண்ணிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாஸ எண்ணிக்கையில் குறைவான இன சமூகங்களின் வாக்குகளை இலக்கு வைத்து செயல்பட்டு வருகின்றார் – முக்கியமாக தமிழ்த் தேசிய இனத்தின் வாக்குகள் தனக்கே கிடைக்குமென்று அவர் நம்பு கின்றார்போலும். இந்த அடிப்படையில்தான், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறிவருகின்றார். இதன் மூலம் தமிழ் மக்களை திருப்திப்படுத்த முடியுமென்று அவர் நம்புகின்றார்போலும்.
ஆனால், பொலிஸ் அதிகாரம் அடங்கலான 13 தொடர்பில் அவர் உறுதியாக பேசுவதாகத் தெரியவில்லை. இதேவேளை, அவரின் தகப்பனாரால் பறித்தெடுக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள விடயங்கள் அனைத்தையும் மீளவும் 13இன் கீழ் கொண்டு வருவேன் என்பதையும் அவர் கூறவில்லை. மிகவும் கவனமாகவே சொற்களை பயன்படுத்தி வருகின்றார். ஆனால், தனது வாய்மூல வாக் குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் வழமைபோல் வாக்களிக்க வேண்டு மென்று எதிர்பார்க்கின்றார்.
இலங்கையின் பேரினவாத அரசியல் கொள்கையில் இதுவரையில் எந்தவொரு முற்போக்கான மாற்றங்களும் ஏற்படவில்லை. முன்ன ரைப்போல் அனைத்தும் அப்படியே இருக்கின்றன. இந்த பேரினவாதக் கொள்கையை அரசியல் மயப்படுத்தி – சிங்கள மக்களை தமிழ் விரோத அரசியலின் அடிமைகளாக மாற்றியதில் 1948இற்கு பின்னர் இலங்கைத் தீவை ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களுக்கும் பங்கு உண்டு.
இந்தப் பங்கில் ஒன்றை விடவும் இன்னொன்று சிறந்தது என்று கூறுவ தற்கு எதுவுமில்லை. இதில் சஜித் பிரேமதாஸவுக்கும் ஏனைய தென்னி லங்கை வேட்பாளர்களுக்கும் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லை. இதனை வெளிப்படையாகப் பேசும் அரசியல் துணிவில்லாவிட்டால், அமைதியாக இருப்பதே மேலானது.